வியாழன், 22 மார்ச், 2012

ரசமிழந்த முகங்கள்

மனவெளி தகர்ந்து தவிடு பொடியாகும்

உள் மன ஆழத்தில் பூகம்பம் வெடிக்கும்.

நட்பு, தோழமை ரிக்டர்களை கடந்து

முற்போக்கு முகம் வழியே

முழுமையாய் வெடித்து விழும்

பிற்போக்கு பூதம்.

ஆணும் பெண்ணும் நிகரேனும் அலங்காரமாய்

தட்டிகளில் மட்டுமே

பாரதீ!

வித விதமாய் மேற்கோள்கள்

விறு விறுப்பான சிறப்புரைகள்.

கூசாமல் பேசி மெருகேறும் தலைமை,

விமர்சனம் வந்திட்டால் கொக்கிபோடும்

வினோதங்கள்!

நேராக பாயும் கூரான பதில்களால்

மீசைகளின் பின்னே

ரசமிழந்த முகங்கள் !

கொள்கைகள் மறந்துபோக

கோபத்தில் கொப்பளிக்கும்

தோல்வியை மறைத்துக்கொள்ள

துரோகத்தை கைகொள்ளும்

அகங்கார நடைமுறையை

அதிரடியாய் அரங்கேற்றும்

நம்பிக்கைகள் சிதறிவிழும்

இடிந்து போன மனவெளியில்

இத்தனை இடர்பாடுகளுக்கும் பின்

இன்று புதிதாய் பிறந்தேன்

இன்னும் புதிதாய் வளர்வேன்

தளராத உறுதியுடன்

பாரதி பெண்ணாய் !

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

இழப்பு

அந்த பையன் இர்பான் இப்போது என்ன மனநிலையில் இருப்பான்?
ஒரு அம்மாவின் மன நிலையில் மனசு பதறுகிறது. ஹிந்தியில் குறைந்த
மார்க் ஒரு 15 வயசு சிறுவனின் வாழ்கையை புரட்டி போடமுடியுமா?
அவனுக்கு கோபம் அந்த டீச்சர் மீதா?
இப்போது அந்த பையனின் மன நிலை எப்படி இருக்கும்?
துடிக்க துடிக்க அந்த டீச்சர் சரிவதை கண் முன் பார்த்தது, அவனை சுற்றி
எல்லோரும் பதறியது, போலீஸ் வந்து பிடித்தது..இப்படி .
சாப்பிட, தூங்க முடியாமல் கண்களில் பயத்துடன்
இனிவரும் நாட்களில் வெறுப்புடன் மற்றவர்கள் பார்ப்பதை
சகித்துக்கொண்டு பாவம் அந்த குழந்தை என கண்ணீர் வருது.
அவனுக்கு பிடிக்காத அந்த பாடம் அவன் கனவுகளை கலைத்து போட்டுவிட்டது
என இனியாவது இந்த சமூக அமைப்பு புரிந்து கொள்ளுமா?
இது அவன் அப்பா அம்மாவிற்கு இனி புரிந்து அந்த பையனை மீட்க முடியுமா?
எதுவும் செய்ய முடியாமல் அந்த பையனின் கத்திக்கு இரையானது
உமாமகேஸ்வரி என்ற அந்த டீச்சர் அல்ல.
இர்பான் கண் முன் எதிரியாய் நின்றது
இன்றைய பள்ளிகளின் பாட அமைப்பும் தேர்வு முறையுமே.
பாட புத்தகங்கள் அந்த பையனை முட்டாள்
என முகத்தில் அறைந்துகொண்டே இருந்திருக்கிறது.
தனது புத்திசாலிதனத்தை நிருபிக்க முடியாமல்,
அவன் மனநிலையை பகிர்ந்துகொள்ளும்
சூழல் கிடைக்காததல் பொறுமை இழந்து,
அவன் கத்தியால் குத்தி கொன்று போட்டது
அந்த அப்பாவி டீச்சர் என்ற உருவத்தில் அவன் பார்த்த பாட அமைப்பை..
அந்த பையனை பார்த்து கைகளை பிடித்து
தலையை கோதி ஆறுதல் சொல்ல தோன்றுகிறது.
அவனின் அம்மா அப்பாவோ , பள்ளியோ
அவனுடன் நல்ல முறையில் பேசி
அவனின் புரிதலில் இருக்கும் கோளாறை சரி செய்ய மெனக்கிடிருந்தால்?
அதை செய்யாமல் விட்டது நம் தவறில்லையா?
ஆனால் அதற்கு அந்த டீச்சர் இன் குடும்பமும் ,
இர்பான் , அவன் குடும்பம் கொடுத்திருக்கும் விலை?
அந்த அம்மாவை உடனே பார்த்து
அவர்களின் குழந்தை குற்றம் செய்ய பிறக்கவில்லை..
புறசூழலுக்கு பலியாகிப்போனது,
டீச்சர் மட்டுமல்ல
இர்பானின் வாழ்க்கையும்
.
இதை உரத்து சொல்லவேண்டியது
நம் கடமை என மனம் பரபரக்கிறது.

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

புரிதல்

எனக்கான நீ
ஒரு விலகலின் நிமித்தம் தயங்கி பார்க்கிறாய்!
உனது புரிதலானபார்வை காட்டி கொடுக்கிறது உன்னை.

ஒரு கட்டாயத்தின் பேரில் தொடர்கிறாய் தொடர்பை!
உனது தொடர்பற்ற பேச்சு மாட்டிவைக்கிறது உன்னை.

ஒரு அக்கறையோடு உன் உயிர்தொடும் என் உணர்வுகள்!
உனது உயிரற்ற வார்த்தைகளால் புதைத்துகொள்கிறாய் உன்னை.

ஒரு சமாளிப்பின் புள்ளியில் சிரித்து வைக்கிறாய் பதிலை !
உனது சிரிப்பற்ற சிரிப்பு உணர்த்திவிடுகிறது உன்னை.

ஒரு சராசரி மனிதனாய் விலகுகிறாய் பாதையில் !
உனது புரிதலற்ற விலகல் புரிய வைக்கிறது உன்னை!

திங்கள், 19 செப்டம்பர், 2011

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

வாழ்க்கை

புரியாத வயதில் புரிந்ததாய் நினைத்து
புரிந்த செயல்களின் விளைவுகள் புரியும் வயதில் புரியும்போது,
ஏன் அப்போதே புரியவில்லை என்று
அல்லாடுவதும்,
காண மறுத்ததை கண்ட பிறகு
மறுத்ததை நினைத்து மருகுவதும்,
சொல்ல வேண்டியதை சொல்லாமல் விட்டபிறகு
மனதில் இருப்பதை மறைக்கப் பாடுபடுவதும்,
தேடியது கிடைத்தும் தொட முடியாத தூரத்தில் இருப்பதும்.......
மனதில் நிற்பது கண்ணீராய் வழிந்து ஓடுவதும்
கண்முன் நிற்பது கண்ணீருக்கு காரணமாக இருப்பதும் ....
வாழ்க்கை எப்போதும் உடலை வருடி
கடந்து சென்ற தென்றலைப் போல
சுகமாகவும் இருக்கிறது
காண முடியாததால் சுமையாகவும் இருக்கிறது

அன்பு+நட்பு+நேசம்+தோழமை=...

அன்புடன், நேசமுடன்,பாசமுடன்,ப்ரியமுடன்,
தோழமையுடன்,சரியான புரிதலுடன்,
அளவான உரிமையுடன், அதிகமான தெளிவுடன்,
வாழ்த்தவேண்டிய தருணங்களில்
மிகையற்ற பாராட்டுதல்களையும் ,
கண்டிக்கவேண்டிய கணங்களில் கணக்கான கடுமையையும்,
அருகாமை தேவையான அவசர காலங்களில்,பண்புடன் கூடிய நேர்த்தியான கவனிப்பையும்,
இனிமையும், இதமுமாக
வாழ விழையும் பொழுதுகளில்,
மனதிற்கும் மனதிற்குமான இடைவெளிகள் ஏதுமின்றி,
பாசாங்கு இல்லாமல் பளிச்சென வெளிப்படுத்தி,
நட்பை, தோழமையை, காலத்திற்கும் கண்ணென மதித்து,
முரண்களால் முறிந்து விடாமல் தெளிவான
உணர்தலுடன் செழுமைபடுத்தி,
சிறப்பாக தொடரஎத்தனித்து,
இனிதிலும் இனிது, புதிதிலும் புதிதாக,
என்றென்றும் அன்புடன்...

ஞாயிறு, 12 ஜூன், 2011

என்ன செய்ய போகிறது ?

பாஸ்கோ!
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் - எங்களின் கண் முன்னே
சூறையாடப்படுவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என
மூன்று நாட்களுக்கும் மேல் ஒரிசா கிராம மக்கள் போராட்ட களத்தில்.
பதினெட்டாயிரம் கோடி ரூபாய் செலவு செய்து அலங்கார பந்தல் போட்டு, ஆயிரக்கணக்கில் மின்விசிறிகளும், பளபளவெனவிரிப்புகளும் ,
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்கேன்களும் என
தலைநகர் தில்லியில் ராம்தேவ் நடத்த முயன்ற
பகட்டான போராட்டம் அல்ல இது.
வாழ்வா சாவா என பெண்களும் குழந்தைகளும் கொளுத்தும் வெய்யிலில்
எந்த வித விளம்பரமும் இன்றி, கட்டாந்தரையில்.
எங்கே சென்றது மத்திய மாநில அரசுகள்?
ஸ்டார் ஹோடேலில் ராம்தேவுடன் பேச்சுவார்த்தை நடத்திய
மத்திய மந்திரிமார்களே எங்கே சென்றீர்கள்?
எதிரே ஆயுதம் தாங்கிய படைகள், சுட்டெரிக்கும் வெயில் .
உச்சிமீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை என
கிராம மக்கள் .. குறிப்பாக சிறுவர் சிறுமியர் ,பெண்கள் .
பசி வெய்யிலில் தாங்களே அரணாக , கட்டாந்தரையில் குப்புறபடுத்து..
ஒரு முதியவர் ஒரு பாட்டிலில் இருந்து அந்தகுழந்தைகளின் வாயில் துளி துளி தண்ணீர் விடு வதையும், இருக்கும் துளி நீரை படுத்திருக்கும் மக்கள் மீது தெளித்து செல்வதையும் பார்க்க பதறுகிறது .
மக்கள் போராட்டம் வெற்றி பெறவேண்டும் .
தங்களின் வாழ்வாதாரமான துண்டு நிலத்தையும் இழந்து விடுவோமோ என்ற பயத்தில் மக்கள்.
நியாயமான கோரிக்கைகளைகளுக்காக என போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
பணம் புழங்கும் போராட்டமெனில் உடனடி கவனம் செலுத்தும்
மத்திய மாநில அரசுகள் ,
பாஸ்கோ போராட்டத்தில் என்ன செய்யபோகிறது ?