ஞாயிறு, 30 டிசம்பர், 2012

நெஞ்சு பொறுக்குதில்லையே !

நெஞ்சு பொறுக்குதில்லையே !
 

பெண்களின் மீது நடத்தப்படும் பாலியல் கொடுமைகளின் முத்தாய்பாக நடந்தேறியது.
டெல்லி மருத்துவமாணவி யின்  பாலியல் பலாத்காரம் .
65 ஆண்டு சுதந்திரம்  பெண்களுக்கு  பெற்று  தந்துள்ள  பெருமை! கொடூரமான தாக்குதலுக்கு உள்ளான  அந்த பெண் 
13 நாள்  சிகிச்சை பலனின்றி இறந்துபோனது ,
 இந்திய அன்னையின் மீது விழுந்துள்ள பேரிடி . .
 இன்னும் ஒரு மகளை இந்த  அரசின் கையாலாகாத போக்கினால் பறிகொடுத்து பதறி நிற்கிறாள் இந்தியா . 
 நாடு  முழுதும் நகரமோ கிராமமோ பெண் என்ற அளவில்   
நிதம் நிதம் நிகழும் கொடுமைகள்  இன்னும் எத்தனை  காலம் தொடரும்?  கண்ணீருடன் நியாயம் கேட்டு  வெகுண்டு நிற்கும் சாதாரண மக்களுக்கு என்ன பதில் சொல்லபோகிறது இந்த அரசாங்கம் ?டில்லி நகரமே ஸ்தம்பித்தது மக்களின் எழுச்சி கண்டு . மனித சங்கிலி போராட்டங்களும் ,ஊர்வலங்களும்,  இனியும் பொறுக்க மாட்டோம் என்பதை 
 தெள்ள தெளிவாக எடுத்துக்காட்டிய பின்னும், அரசு மெத்தன போக்கை தொடருமானால்  மத்திய  அரசிற்கு அவமானம்  வேறெதுவும் இல்லை .
டில்லியை தொடர்ந்து  வெளிச்சத்திற்கு  வரும் பாலியல் சித்ரவதைகள்,கொலைகள்,தற்கொலைகள்.. ஆட்சியாளர்கள்  அவசர நடவடிக்கைளை உடனுக்குடன்  செயல்படுத்தவேண்டிய கட்டாயத்தை உணர்த்துகிறது.
காவல் துறையும் ,நீதித்துறையும் 2 கண்களாக செயல்பட  இன்னும் எத்தனை பெண்களை இழக்க போகிறோம்?
 33% சத இட ஒதுக்கீடு பற்றி இப்போதாவது அரசு சிந்திக்குமா?
 இல்லை அரசியல் கட்சிகள் இன்னும் கூட பாராளுமன்ற  தொடர்களில் அரசியல் ஆதாயத்திற்காக நாடகமாடிகொண்டே
 பெண்களுக்காக குரல்கொடுப்போம் என ஏமாற்றபோகிறார்களா ?  
ஆணும் பெண்ணும் சரி நிகர் 
என்ற சிந்தனையை ஊட்டும் பள்ளி கல்வி முறையும் ,
அதை இயல்பாக மனதில் பதிய வைக்கும் வாழ்க்கை முறையும்  
நமது உடனடி கடமையாக நம் முன் நிற்கிறது.


வியாழன், 22 மார்ச், 2012

ரசமிழந்த முகங்கள்

மனவெளி தகர்ந்து தவிடு பொடியாகும்

உள் மன ஆழத்தில் பூகம்பம் வெடிக்கும்.

நட்பு, தோழமை ரிக்டர்களை கடந்து

முற்போக்கு முகம் வழியே

முழுமையாய் வெடித்து விழும்

பிற்போக்கு பூதம்.

ஆணும் பெண்ணும் நிகரேனும் அலங்காரமாய்

தட்டிகளில் மட்டுமே

பாரதீ!

வித விதமாய் மேற்கோள்கள்

விறு விறுப்பான சிறப்புரைகள்.

கூசாமல் பேசி மெருகேறும் தலைமை,

விமர்சனம் வந்திட்டால் கொக்கிபோடும்

வினோதங்கள்!

நேராக பாயும் கூரான பதில்களால்

மீசைகளின் பின்னே

ரசமிழந்த முகங்கள் !

கொள்கைகள் மறந்துபோக

கோபத்தில் கொப்பளிக்கும்

தோல்வியை மறைத்துக்கொள்ள

துரோகத்தை கைகொள்ளும்

அகங்கார நடைமுறையை

அதிரடியாய் அரங்கேற்றும்

நம்பிக்கைகள் சிதறிவிழும்

இடிந்து போன மனவெளியில்

இத்தனை இடர்பாடுகளுக்கும் பின்

இன்று புதிதாய் பிறந்தேன்

இன்னும் புதிதாய் வளர்வேன்

தளராத உறுதியுடன்

பாரதி பெண்ணாய் !

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

இழப்பு

அந்த பையன் இர்பான் இப்போது என்ன மனநிலையில் இருப்பான்?
ஒரு அம்மாவின் மன நிலையில் மனசு பதறுகிறது. ஹிந்தியில் குறைந்த
மார்க் ஒரு 15 வயசு சிறுவனின் வாழ்கையை புரட்டி போடமுடியுமா?
அவனுக்கு கோபம் அந்த டீச்சர் மீதா?
இப்போது அந்த பையனின் மன நிலை எப்படி இருக்கும்?
துடிக்க துடிக்க அந்த டீச்சர் சரிவதை கண் முன் பார்த்தது, அவனை சுற்றி
எல்லோரும் பதறியது, போலீஸ் வந்து பிடித்தது..இப்படி .
சாப்பிட, தூங்க முடியாமல் கண்களில் பயத்துடன்
இனிவரும் நாட்களில் வெறுப்புடன் மற்றவர்கள் பார்ப்பதை
சகித்துக்கொண்டு பாவம் அந்த குழந்தை என கண்ணீர் வருது.
அவனுக்கு பிடிக்காத அந்த பாடம் அவன் கனவுகளை கலைத்து போட்டுவிட்டது
என இனியாவது இந்த சமூக அமைப்பு புரிந்து கொள்ளுமா?
இது அவன் அப்பா அம்மாவிற்கு இனி புரிந்து அந்த பையனை மீட்க முடியுமா?
எதுவும் செய்ய முடியாமல் அந்த பையனின் கத்திக்கு இரையானது
உமாமகேஸ்வரி என்ற அந்த டீச்சர் அல்ல.
இர்பான் கண் முன் எதிரியாய் நின்றது
இன்றைய பள்ளிகளின் பாட அமைப்பும் தேர்வு முறையுமே.
பாட புத்தகங்கள் அந்த பையனை முட்டாள்
என முகத்தில் அறைந்துகொண்டே இருந்திருக்கிறது.
தனது புத்திசாலிதனத்தை நிருபிக்க முடியாமல்,
அவன் மனநிலையை பகிர்ந்துகொள்ளும்
சூழல் கிடைக்காததல் பொறுமை இழந்து,
அவன் கத்தியால் குத்தி கொன்று போட்டது
அந்த அப்பாவி டீச்சர் என்ற உருவத்தில் அவன் பார்த்த பாட அமைப்பை..
அந்த பையனை பார்த்து கைகளை பிடித்து
தலையை கோதி ஆறுதல் சொல்ல தோன்றுகிறது.
அவனின் அம்மா அப்பாவோ , பள்ளியோ
அவனுடன் நல்ல முறையில் பேசி
அவனின் புரிதலில் இருக்கும் கோளாறை சரி செய்ய மெனக்கிடிருந்தால்?
அதை செய்யாமல் விட்டது நம் தவறில்லையா?
ஆனால் அதற்கு அந்த டீச்சர் இன் குடும்பமும் ,
இர்பான் , அவன் குடும்பம் கொடுத்திருக்கும் விலை?
அந்த அம்மாவை உடனே பார்த்து
அவர்களின் குழந்தை குற்றம் செய்ய பிறக்கவில்லை..
புறசூழலுக்கு பலியாகிப்போனது,
டீச்சர் மட்டுமல்ல
இர்பானின் வாழ்க்கையும்
.
இதை உரத்து சொல்லவேண்டியது
நம் கடமை என மனம் பரபரக்கிறது.